Taj Mahal replica
இந்தியாவில் உள்ள தாஜ் மகாலை போன்றதொரு கட்டிடத்தை துபாயில் கட்டப் போவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. துபாயில் “பால்கன் சிட்டி ஆப் வொண்டர்ஸ்” என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் ‘உலகமே ஒரு நகரத்துக்குள்’ என்று அழைக்கப்படுகிறது.
அதன் அடிப்படையில் பிரமிட்கள், தொங்கும் தோட்டங்கள், ஈபில் கோபுரம்,
சீனாவின் நீண்ட சுவர், பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் போன்ற உலக அதிசயங்கள்
செயற்கையாக கட்டப்பட்ட உள்ளன. அதன் ஒரு பகுதியாக தாஜ் மகால் இடம் பெறும்.
அதை தாஜ் அரேபியா என்று அழைக்கப் போகிறார்கள்.
‘ஆக்ராவில் இருக்கும் தாஜ்மகாலைப் போலவே ஆனால் பல மடங்கு பெரிதாக தாஜ்
அரேபியா கட்டப்படும்’ என்கிறார் பால்கன் சிட்டி சேர்மன் சலிம் அல் மூசா.
குடியிருப்பதற்கான வீடுகளும், கடைகளும், திருமண அலங்கரிப்பு
நிலையங்களும் இடம் பெறும் இந்த வளாகத்தை சுற்றி முகலாய பாணி தோட்டங்கள்
அமைக்கப்படுமாம். தாஜ் அரேபியா முழுக்க திருமண நிகழ்வுகளை மையப்படுத்தி
இருக்குமாம். அதில் தங்க நகைகள், ஆடைகள், திருமண நிகழ்வுகள் நடத்த உகந்த
அறைகள் இடம் பெறும்.
இந்தச் செய்தியை கேட்கும் போது நம் மனதில் துபாயை பார்த்து “ நீ
வாங்குற அஞ்சிக்கும் பத்துக்கும் உனக்கேன் இந்த பொழப்பு?” என்று கேட்கத்
தோன்றுகிறது.
எண்ணெய் வியாபாரம் முழுவதையும் வெளிநாட்டினருக்கு தாரை வார்த்து விட்டு
துபாயை ஒரு உல்லாச புரியாக மாற்ற அந்த அரசு செய்த கூத்துகள் ஒன்று
இரண்டல்ல. செயற்கைத் தீவு, கடல் மணலுக்கு ஏசி, ஈச்சமரம் போன்ற தீவு, உலக
வடிவில் ரியல் எஸ்டேடுகள், உலகின் மிகப் பெரிய கட்டிடம் என ஆடிய ஆட்டமென்ன?
அதற்கு உறிஞ்சிய மூன்றாம் உலக நாடுகளின் ஏழை உழைக்கும் மக்களின் ரத்தம்
எவ்வளவு?
உலகப் பொருளாதார வீழ்ச்சி இடியாய் இறங்கிய போது, முதலில் ஒன்றுமில்லை
என்பது போல் பாவலா காட்டினாலும் உள்ளுக்குள் கலகலத்து போனது துபாய். மெல்ல
மெல்ல, ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்ற ஓசை கூட இல்லாமல் போய் இப்போது வெறும்
காற்று தான் வருகிறது.
நெருக்கடிக்கு பின் பலரை வீதியில் விட்டது துபாய். பலருக்கு உல்லாசபுரி ஒரே நாளில் நரகமாகியது.
அரசு நிதி நெருக்கடியில் சிக்கி தவித்தது. ஆனால் வெளியே நொடித்துப் போன
ஒரு ஜமீன்தாரின் வீண் பந்தாவை மட்டும் விடாமல் காட்டிக்கொண்டிருக்கிறது.
ரியல் எஸ்டேட் துறை வீழ்ந்துவிட்ட நிலையில் இப்பொழுது
அறிவிக்கப்பட்டுள்ள திட்டம் யாரை திருப்திப்படுத்த? ஐரோப்பாவிலும்
அமெரிக்காவிலும் மக்கள் சம்பள உயர்விற்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
அங்கே பருப்பு வேகாமல் மூன்றாம் உலக நாடுகளின் முழுச்சந்தையை பிடிக்க
பன்னாட்டு நிறுவனங்கள் முனைகின்றன. இப்பொழுது இவர்களின் புதிய
வாடிக்கையாளர்கள் ஆசியாவில் உள்ள உயர் நடுத்தரவர்க்கத்தினர்.
அதனால் தான் தாஜ் அரேபியாவை பற்றி சொல்லும் போது வளைகுடா நாடுகளில்
வாழும் லட்சக்கணக்கான இந்தியர்கள் தங்கள் திருமண நிகழ்வுகளை மிக
நேர்த்தியாக நடத்திக் கொள்ளலாம் என தூபம் போடுகிறார் திட்ட இயக்குனர்.
கூடவே துபாயில் வாழும் உழைக்கும் மக்களை மகிழ்விக்க என அவர்களின்
பொழுதுபோக்கை காசாக்கி கொள்ளும் பாலிவுட்டினர், “பேஷ் பேஷ் நாங்க தாஜ்
அரேபியாவுக்கு வந்து படப்பிடிப்பு நடத்திக் கொள்கிறோம்” என்கிறார்கள்.
இது நிஜமாகவே பெருமைப்பட வேண்டிய விஷயம் தான். நிலக்கரி ஊழல், குஜராத்
தேர்தல் என சகல செய்திகளையும் மீறி இணையத்திலும டிவிகளிலும் இந்தியாவின்
பெருமை, தாஜ்மகாலின் அருமை என விவாதங்கள் நடத்தலாம். விளம்பர இடைவெளியுடன்
கட்டிடம் கட்டுவதை லைவாக காட்டுவதற்கு ஏற்பாடு செய்யலாம்.
இந்த உலக அதிசய கட்டிங்களை கட்டும் திட்டத்துக்கு பலியாகப் போவது
இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளிலிருந்து அழைத்துச் செல்லப்படும்
உழைக்கும் மக்கள். துபாயை சொர்க்கமாக்க, உல்லாசபுரியாக்க இவர்கள் 40 டிகிரி வெயிலில் இரண்டு வேளை உண்டு, 16 மணி நேரம் உழைக்க வேண்டும்.
உழைக்கும் மக்களின் ரத்தத்தைச் சுரண்டி உல்லாசிகளுக்கு விருந்தாக படைக்க இன்னும் ஒரு முறை தயாராகிறது துபாய்.